நவீன வசதிகளுடன் புது பொலிவு பெறும் புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதி

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதியில் நடைபாதை, வாகன பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டம் தயாரிப்பு குறித்து துறை செயலர், பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நகர வீதிகள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ள நகர வீதிகள்.

பிரெஞ்சு ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட நேரான வீதிகளில், ஒரு இடத்தில் அகலமான சாலை, அடுத்த சில அடி துாரத்தில் அகலம் குறைந்த குறுகலான சாலை, தாறுமாறான வாகன பார்க்கிங், நடைபாதை ஆக்கிரமிப்பு, பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, புதுச்சேரி அரசு ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து ரூ. 4,750 கோடி கடன் பெற்று, பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதில், புதுச்சேரி அரசு 20 சதவீத பங்கும், ஆசிய மேம்பாட்டு வங்கி 80 சதவீத பங்கு அளிக்கிறது.

இதன் மூலம் புதுச்சேரி நகர வீதிகளை முறைப்படுத்தி, தரமான சாலை, வடிகால் வாய்க்கால், பார்க்கிங் வசதி உள்ளிட்ட ஒழுங்குப்படுத்தப்பட்ட வீதிகளாக மாற்றுதல், நகர பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் பாதாள சாக்கடை அமைத்தல், உப்பனாறு உள்ளிட்ட வாய்க்கால் மேம்பாடு உள்ளிட்ட 14 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காந்தி வீதியில் புதுச்சேரி ரயில் நிலையம் துவங்கி முத்தியால்பேட்டை விநாயகர் கோவில் வரை 3.1 கி.மீ., துாரமும், 1.5 கி.மீ., துாரம் கொண்ட மிஷன் வீதியை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் புதிய வளர்ச்சித் திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தில் காந்தி வீதி துவக்கம் முதல் முடியும் வரை ஒரே அகலமான சாலையும், சாலையோரம் விசாலமான நடைபாதை, தரைக்கு அடியில் வடிகால் வாய்க்கால், முறைப்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

சாலையின் ஒரு பக்கம் அகலமான பிளாட்பாரம், கழிவுநீர் வாய்க்கால், சாலை மேம்பாடு, பாதாள சாக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்ட பணி மேற்கொள்வது குறித்து, புதுச்சேரி காந்தி வீதி, மிஷன் வீதிகளில் பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா, உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள் சீனிவாசன், சுந்தரி, மின்துறை, நகராட்சி பொறியாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

திட்ட வடிவமைப்பு தயாரித்து, அரசின் ஒப்புதல் பெற்று இப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

Advertisement