மாஜி அமைச்சர் மகேசுக்கு லஞ்சம்; தி.மு.க., நிர்வாகி ஆடியோ வைரல்

4

ஆத்துார்: திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் ஜாகிர் உசேன் (தி.மு.க.,) முன்னாள் அமைச்சர் மகேசுக்கு லஞ்சம் கொடுத்ததாக பேசிய ஆடியோ வைரலாகியது.

சித்தையன்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த ஜாகிர் உசேன். முன்னாள் அமைச்சர் மகேஷ் உடனிருந்த சில புகைப்படங்களுடன் இவர் பேசியதாக இரு ஆடியோக்கள் நேற்று முன்தினம் வைரலாகியது.

அதில், 'முன்னாள் அமைச்சர் பெரியசாமி பரிந்துரை கடிதத்திற்கு மரியாதை கொடுக்காத மகேஷ் கைதாவது வரவேற்புக்குரியது. எனது மனைவி நபிஷா பேகம்(அரசு பள்ளி ஆசிரியர்) பணி மாறுதலுக்காக 7.7 லட்சம் ரூபாய் கட்டினேன். ஒரு தலைமை ஆசிரியர் மூலம் அரியலுார் முதன்மைக் கல்வி அலுவலகம் வழியே சென்னையில் கொடுத்தேன்.

இதே முறையில் திண்டுக்கல் மாவட்டம் வளவிசெட்டிபட்டி தரம் உயர்த்திய பள்ளியில் 11 ஆசிரியர்கள் 7.5 லட்ச ரூபாய் கட்டி வந்துள்ளனர். கட்சிக்காரருக்கே இந்த நிலை என்பதால் அவரது கைது குறித்து வருந்த ஒன்றுமில்லை' என பேசப்பட்டிருந்தது.

இந்த தகவலையடுத்து ஜாகிர்உசேன், அவரது மனைவி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த ஆசிரியர்களின் மாறுதல் முறை பற்றி விசாரிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை, போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நேற்று ஜாகிர் உசேன் வெளியிட்ட மறுப்பு வீடியோவில் ஆடியோவிற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement