வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு

8

லக்னோ: அரசை மாற்றும் நோக்கத்துடன் வன்முறை செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடையாது என்று உ.பி., அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. மாநில அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

அதில் கூறப்பட்டதாவது: வன்முறை வாயிலாக தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதே தங்களின் நோக்கம் எனக்கூறும் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள தனிநபர்கள் அரசு வேலை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.

பணி நியமனத்திற்கான சரிபார்ப்பு தேதி மூன்று ஆண்டுக்கு முன்பு, 21 வயதான பிறகு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தால் அவர் இன்னும் அதில் தீவிரமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்.

அவரது நடத்தையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருந்தால் அந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம்.

விண்ணப்பதாரரின் அரசியல் கொள்கை அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டும் அவரை தகுதியற்றவராக அறிவிக்க முடியாது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது விசாரணை நிலுவையில் இருந்தாலோ அவர் தானாகவே தகுதியற்றவர் ஆகிவிட மாட்டார். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், சமரசமாக முடிந்த வழக்குகள் மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் உள்ளவர்களுக்கு தடை விதிக்கப்படாது.

போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை வருவதற்கு தாமதமானால் பணி நியமனத்தை தாமதப்படுத்த தேவையில்லை. விண்ணப்பதாரரிடம் சுய சான்றுவிண்ணப்பம் பெற்று தற்காலிக பணி நியமன கடிதம் வழங்கலாம். சரிபார்ப்பில் தவறான தகவல் கொடுத்தது தெரிந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட போலீசாரும், உளவுத்துறையும் சரிபார்ப்பு அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும். இதற்காக விண்ணப்பதாரர் வீட்டிற்கு போலீசார் நேரில் செல்ல தேவையில்லை. விண்ணப்பதாரர் போலீஸ் முன் நேரில் ஆஜராக வேண்டியதில்லை.

Advertisement