நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்

3

நமது சிறப்பு நிருபர்

உத்தர பிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் காலியசாக உள்ள 28 மேல்சபை தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. பட்டதாரிகள், ஆசிரியர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்த இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாக தொடங்கின.

இதில், உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 11 சட்ட மேல்சபை தொகுதிகளில், ஆறு தொகுதிகளில் ஆளும் கட்சியான பா.ஜ., வென்றது. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி மூன்று தொகுதிகளில் வென்றது.

கர்நாடகாவில், காங்கிரஸ் முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆட்சியில் இருந்தாலும், அங்கும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அம்மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், 'மஹாயுதி' கூட்டணி ஆட்சியில் உள்ள மஹாராஷ்டிராவில் மட்டும் எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியது. இங்கு மொத்தம் உள்ள ஐந்து சட்ட மேல்சபை தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின், 'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணி மூன்று தொகுதிகளை வென்றுள்ளது.

குறிப்பாக பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிசின் சொந்த ஊரான நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்ட மேல்சபை தேர்தலில் தன் கணக்கை காங்கிரஸ் துவக்கியுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோட்டையாகவும் கருதப்படும் நாக்பூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சி தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ.,வும், சிவசேனாவும் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளன.

பீஹாரில் மொத்தம் உள்ள எட்டு சட்ட மேல்சபை தொகுதிகளில் ஆளும் பா.ஜ., ஆறு தொகுதிகளை கைப்பற்றி, தன் ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. எஞ்சிய இரு இடங்களை எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளமும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் கைப்பற்றின.

Advertisement