கோவில் நிர்வாகிகள் தேர்வில் தகராறு இருவரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கோவில் நிர்வாகிகள் தேர்வு செய்வதில் ஏற்பட்ட தகராறில் குற்றவாளிக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த மூ. புதுக்குப்பத்தில் உள்ள படைவீட்டு அம்மன் கோவிலில், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கோவில் நிர்வாகிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது.
இதில், ராஜ்குமார் 40; என்பவர், தாக்கியதில், மனோகர், சக்தி நாராயணன் ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை, புதுச்சேரி ஏழாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோத் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட இருவருக்கும், இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜரானார்.