நவம்பரில் முதல்வர் இல்லம் முன் போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

மதுரை: தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு ஏற்படும் தடைகள், அவமதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி நவம்பரில் முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

சங்க மாநில தலைவர் லியாகத் அலி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:

சங்க தீர்மானங்களை அமைச்சர்கள், துறை செயலாளர்களிடம் அளிக்கவும், புதிய மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்யவும் அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகத்திற்கு சென்றனர். அடையாள அட்டையை காண்பித்தும் நிர்வாகிகள் தடுத்து, அலைக்கழிக்கப்பட்டனர்.

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு சோதனையை ஏற்கிறோம். சங்க நிர்வாகிகள் அடையாள அட்டையை சரிபார்ப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் நிர்வாகிகள் எனத் தெரிந்தும், ‛அரசு செயலரிடம் முன்கூட்டியே நேரம் பெற்றிருந்தால்தான் அனுமதிப்பேன்’ என்றுகூறி கெடுபிடிகளை ஏற்படுத்துவது எதிர்ப்புக்குரியது.

போலீசாருடன் மோதலை கடைபிடிப்பது எங்கள் நோக்கமல்ல. அரசு ஊழியர்கள் சங்க தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது உரிமை. இப்பிரச்னை தொடருமானால், நவம்பர் இறுதியில் முதல்வர் இல்லம் முன் பல்வேறு துறை சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement