அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

17

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, அடுத்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில், தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 12:00 மணிக்கு முடிந்தது. கனிம வளத்துறை அமைச்சர் பிரபு ஆஸ்திரேலியாவிற்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் லண்டனுக்கும் சென்றுள்ளதால், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில், எட்டு புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி தருவது குறித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தாழம்பூரில், உரிமையாளர்கள் பெயர் தெரியாத நிலங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்தும், மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின், அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:

நான்கு முக்கிய விஷயங்கள் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. எட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மூன்று நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமூக நீதி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாதம், இப்பணிகள் துவங்கும். மக்களின் பொருளாதார நிலை, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில், 800 ஏக்கருக்கு, உரிமையாளர் பெயர் தெரியாத நிலங்கள் உள்ளன. இங்கு, வீடு கட்டி, 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன.

இந்த உரிமையாளர் பெயர் தெரியாத நிலங்கள் தொடர்பான பல முறைகேடுகள், முந்தைய ஆட்சி காலங்களில் நடந்துள்ளன. அப்பாவி மக்களை ஏமாற்றி நிலங்கள், வீடுகள் விற்கப்பட்டு உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, என்னென்ன பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை பணிகளில், மாவட்ட அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை, முதல்வர் விஜய் வழங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement