தீபாவளி நேரத்தில் அதிரடி ஆய்வு: மஹாராஷ்டிராவில் ரூ.9 கோடி உணவுப் பொருட்கள் பறிமுதல்

மும்பை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கலப்படமில்லாத, பாதுகாப்பான உணவு பொருட்கள் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையில் மாநிலம் தழுவிய அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.9 கோடிக்கும் அதிகமான, கலப்பட மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அக். 28 முதல் 31 வரையிலான நாட்களில், 114 வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சத்ரபதி சம்பாஜிநகர் சுந்தர்வாடி பகுதியில் உள்ள பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் சூப்பர் விநியோகஸ்தரான திவ்யா மஹாவிர்தக் கிடங்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி லேபிளிங் மற்றும் கலப்பட சந்தேகத்தின் அடிப்படையில், 2 பேட்ச்களில் வைக்கப்பட்டிருந்த 4,032 பாக்கெட்டுகள் அடங்கிய 2,279 லிட்டர் பதஞ்சலி பசு நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20.20 லட்சம்.

சமையல் எண்ணெய் பறிமுதல்

கொங்கன் மண்டலத்திற்கு உட்பட்ட தானே பிவாண்டியில் உள்ள 'அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்' கிடங்கில் இருந்து பல்வேறு முன்னணி பிராண்டுகளின் 1,44,218 கிலோ சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவே இந்த ஆய்வில் ஒரே இடத்தில் பிடிபட்ட மிகப்பெரிய அளவாகும்.

இதேபோல் புனே மண்டலத்தில் சத்தாராவில் உள்ள சுவாதி ஆயில் மில்லில், 6,671 கிலோ சமையல் எண்ணெயும், சோலாப்பூரில் 6,235 கிலோ எண்ணெயும், சத்தாராவில் உள்ள அமீன் டிரேடர்ஸில் 20,560 கிலோ அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் லாசூர் ஸ்டேஷனில் இயங்கி வந்த ரவி ஆயில் இண்டஸ்ட்ரீஸில் இருந்து 2,710 கிலோ சோயாபீன் எண்ணெய் கைப்பற்றப்பட்டது.

19 நிறுவன உரிமம் ரத்து

தீவிர சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் விதிகளை மீறியதற்காக, 19 உணவு வணிக நிறுவனங்களின் உரிமங்கள் மற்றும் பதிவுகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. மும்பை மாதுங்காவில் 'கஃபே எம்பயர்', காட்கோபரில் உள்ள 'கோகோபிளிஸ் கஃபே', ஆன்டாப் ஹில்லில் உள்ள 'சாகர் மில்க் சென்டர்' மற்றும் லோயர் பரேலில் உள்ள 'ஷிண்டே மசாலா' உள்ளிட்ட பிரபல உணவகங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

கஃபே எம்பயரில், சமையலறை சுவர்களில் எரிந்த எண்ணெய் படிவங்கள், சமைத்த உணவில் ஈக்கள் மொய்த்தது போன்ற அசுத்தமான சூழல் கண்டறியப்பட்டது. கோகோபிளிஸ் கஃபேவில், பூச்சிகள் நடமாட்டம் மற்றும் பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ் இல்லாதது வெளிச்சத்திற்கு வந்தது. சாகர் மில்க் சென்டரில், முறையான ரசீதுகள் இன்றி திறந்த நிலையில் பால் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மற்றொரு தனி சோதனையில் ரூ.79.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 13 வழக்குகள் (FIR) பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, கலப்படப் பொருட்களை ஏற்றிச் சென்ற 6 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement