நித்திய சுமங்கலி அம்மன் கோவில் விழாவில் பால்குட ஊர்வலம்

ராசிபுரம்:ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. பொதுவாக மாரியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக, கம்பம் நடப்பட்டு, விழா முடிந்ததும் நீர்நிலைகளில் விடப்படுவது வழக்கம். ஆனால், இக்கோவிலில் கம்பம் எப்போதும் நிலையாக இருப்பதோடு, அம்மன் கழுத்தில் தாலி எப்போதும் நிலைத்திருக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பெயர் பெற்றது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஐப்பசி, 3ம் நாள் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் பல்வேறு சமூகத்தினர் சார்பில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவிழாவின், 9வது நாள் கட்டளை நிகழ்வு நேற்று நடந்தது. இதையொட்டி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement