வெளிநாட்டில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல்:வெளிநாடுகளில் முதுகலை படிப்பு பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, 2026-27ம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு உலகளாவிய உயர்தர கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று படிக்கும், 10 முஸ்லிம் மாணவர்களுக்கு தலா ஒருவருக்கு அதிகபட்சமாக, 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
'தகுதியுடைய சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவியர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய அனைத்து கல்வி மற்றும் வருமான ஆவணங்களுடன் இணைத்து சென்னை, சேப்பாக்கம் கலசமஹால் பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலக முகவரிக்கு நவ., 9க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசு வழங்கும் உதவித்தொகையை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement