தீபாவளிக்கு புது வரவு பட்டாசு என்னென்ன; அனைவரையும் குஷிப்படுத்த தயாரானது சிவகாசி!

-நமது சிறப்பு நிருபர்-

தீபாவளி என்றாலே பட்டாசு தான். புதிய ஆடைகள் வாங்க நினைக்கிறோமோ இல்லையோ பட்டாசுகள் வாங்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதுாகலம் அடைவர். அனைவருக்கும் பட்டாசுகள் பிடிக்கும் என்றாலும் அதிலும் புதுமைகள் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அந்த வகையில் காலத்திற்கு ஏற்ப பட்டாசுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வித விதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தீபாவளிக்கும் சிவகாசியில் இளையவர் முதல் பெரியவர் வரை விரும்பும் விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.

மலர்ந்து ஜொலிக்கும் தாமரை: குளத்தில் மலரும் தாமரை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இந்த தாமரையை பற்ற வைத்தால் மனதை பறிக்கும். பற்ற வைத்தவுடன் தாமரை போல் மலர்ந்து 20 அடி உயரத்திற்கு சிவப்பு மஞ்சள் கலரில் தீப்பொறி பறந்து ஜொலிக்கும். பறிக்க நினைக்க கூடாது.

துள்ளி வருகுது வேல்: முருகன் சுவாமியிடம் மட்டுமே வேல் இருக்க வேண்டுமா. நாங்களும் வைத்திருப்போம்ல. இதனை கையில் பிடித்து பற்ற வைத்தவுடன் பொறி கிளம்பி எதிரில் நிற்பவர்களை எகிறச் செய்யும். யாரையும் குத்தி விடக்கூடாது.

சூப்பர் சூலாயுதம்: இதனையும் கையில் பிடித்துக் கொண்டு பற்ற வைத்தால் அம்மனே நேரில் வந்து தாண்டவம் ஆடுவது போல் இருக்கும். அந்த சூலாயுதம் அரக்கனை கொல்லும். இந்த சூலாயுதம் நம் மனதை வெல்லும்.

வசீகரிக்கும் வயலட் கலர் கோட்டி: புஸ்வானம் எப்பொழுதும் மஞ்சள் கலரில் மட்டுமே இருக்கும். இந்த புஸ்வானத்தை பற்ற வைத்தால் வயலட் கலரில் வசீகரிக்கும். ஆனால் அதற்காக தொடக்கூடாது.

பகட்டாக மின்னும் பர்பி பைரோ: பொதுவாக மேலே சென்று வெடிக்கும் பட்டாசுகள் எப்பொழுதுமே மஞ்சள் கலரில் ஒளிரும். ஆனால் இந்த பட்டாசை பற்ற வைத்தவுடன் 200 அடி உயரத்திற்குச் சென்று பர்பிள் கலரில் விரிவடைந்து கண்களுக்கு விருந்தளிக்கும். அழகாக இருக்கிறது என்பதற்காக அருகில் செல்லக்கூடாது.

கதர விடும் காப்டர்: இப்பட்டாசுகளை பற்ற வைத்தால் 350 அடி உயரம் வரை சென்று 70 அடி சுற்றளவில் வானில் வர்ணஜாலம் காட்டும். பார்த்துக் கொண்டே இருந்தால் கழுத்து வலிக்கு நாங்க கேரண்டி தருகிறோம்.

விசில் போடும் சீட்டி மார்: இதனை பற்ற வைத்த உடன் ஒன்றுக்கு பின் ஒன்றாக விசில் அடித்துக் கொண்டே பறந்து செல்லும். அதற்காக வாயில் வைத்து அடிக்க முயற்சி செய்யக் கூடாது. அந்த விசிலை ஊதலாம். இந்த விசிலை பார்க்கலாம்.




தரையில் நீந்தும் பன்கி பிஷ்: மீன்கள் தண்ணீரில் நீந்திதான் பார்த்துள்ளோம். ஆனால் இந்த மீன் தரையில் நீந்தும். பற்ற வைத்தவுடன் வாயிலிருந்து தீப்பொறி பறந்து நீந்திச் செல்லும். அந்த மீனை சாப்பிடலாம். இந்த மீனை ரசிக்கலாம்.

சீறி செல்லும் ரேஷ் கார்: கார் ஓட்டுவதற்கு கண்டிப்பாக லைசன்ஸ் தேவை. ஆனால் இந்த காரை சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டலாம். பற்ற வைத்தவுடன் பந்தயத்தில் போல கார் சீறிச் செல்லும். குறுக்கே சென்றால் விபத்து நிச்சயம்.

பொங்கி வரும் ஷாம்பெய்ன்: ஷாம்பெயினை குலுக்கினால் நுரை பொங்கி வரும். இதைப் பற்ற வைத்தால் நுரை போன்று தீப்பொறி வரும். அந்த ஷாம்பெயினை குடிப்பார்கள். இந்த ஷாம்பெயினை வெடிப்பார்கள்.

இப்படி வித விதமான வந்துள்ள பட்டாசுகளை இந்த தீபாவளிக்கு வாங்கி வெடித்து மகிழலாம்.

Advertisement