ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டதால் பயணியர் அதிருப்தி

17

சென்னை: ஆட்டோக்களுக்கு, ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் காட்டும் வசதியுடன் கூடிய மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு கைவிட்டிருப்பது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 13 ஆண்டுகளுக்கு பின், புதிய ஆட்டோ கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இது, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

அவகாசம்



கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, ஆட்டோக்களில், ஜி.பி.எஸ்., கருவி, கட்டண ரசீது தரக்கூடிய பிரின்டர் அடங்கிய மீட்டர்கள் பொருத்தப்படும்; அவை, பிப்., 2014க்குள் கொள்முதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதற்கான டெண்டர் பொறுப்பு, அரசு மின்னணு கழகம் எனப்படும், 'எல்காட்' வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், பல முறை காலக்கெடு நீட்டித்தும், கடைசி வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ள அரசு, தற்போதுள்ள ஆட்டோ மீட்டர்களில் திருத்தம் செய்ய, ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கி உள்ளது.

பாதுகாப்பு



ஆனால், ஏற்கனவே அறிவித்த ஜி.பி.எஸ்., கருவி அடங்கிய டிஜிட்டல் மீட்டர் வழங்கும் திட்டம் குறித்து எதுவும் கூறவில்லை. இதனால், அந்த திட்டத்தை கைவிட்டிருப்பதாக தெரிகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறியதாவது: பெண்களும், குழந்தைகளும், தனியே பயணிக்கும் சூழல் நிலவுவதால், பாதுகாப்பை கருத்தில் வைத்து, அனைத்து ஆட்டோக்களிலும், ஜி.பி.எஸ்., கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். அப்போது தான் ஆட்டோக்களின் இயக்கத்தை கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில்,'டிஜிட்டல் மீட்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்கும்' என்றனர்.

Advertisement