இந்தியாவில் நிமிடத்திற்கு 4 பேருக்கு பக்கவாதம் அப்போலோ மருத்துவமனை பிரிவு தலைவர் தகவல்

கரூர்:''இந்தியாவில், ஒரு நிமிடத்திற்கு, 3 முதல், 4 பேர் பக்கவாத பாதிப்புக்கு ஆளாகின்றனர்,'' என, அப்போலோ மருத்துவமனையின் பிரிவு தலைவர் கற்பகவள்ளி கூறினார்.

கரூர், அப்போலோ மருத்துவமனையில், பக்கவாத நோயாளிகளுக்கு அதிவிரைவாகவும் முழுமையாகவும் சிகிச்சையளிக்கும் நோக்கில், அதிநவீன, 3 படுக்கைகள் கொண்ட பிரத்யேக பக்கவாத சிகிச்சை பிரிவு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போலோ மருத்துவமனை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நிகில் திவாரி தலைமை வகித்தார். புதிய பிரத்யேக பக்கவாத சிகிச்சை பிரிவை, வி.கே.ஏ., பாலிமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருப்பண்ணன் ஆறுமுகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையின் பிரிவு தலைவர் கற்பகவள்ளி, நிருபர்களிடம் கூறியதாவது: நமது நாட்டில், பக்கவாத பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாள்தோறும், 5,100 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, சராசரியாக ஒரு நிமிடத்திற்கு, 3 முதல் 4 பேர் வரை பக்கவாத பாதிப்புக்கு ஆளாகின்றனர். பக்கவாதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது. அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, தாமதிக்காமல் உரிய மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு, நோயாளியை அழைத்து வர வேண்டும். 'கோல்டன் ஹவர்' எனப்படும், பக்கவாதம் ஏற்பட்ட முதல் சில மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து, முறையான அவசர சிகிச்சையை பெற்றுவிட்டால், நிரந்தர பாதிப்பிலிருந்து நோயாளிகளை முழுமையாக காப்பாற்றி, அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப செய்ய முடியும். படித்தவர்கள் கூட, சில நேரங்களில் இந்த அறிகுறிகளை சாதாரண சோர்வு என நினைத்து, காலதாமதம் செய்து விடுகின்றனர். பொதுமக்களிடையே இது குறித்த போதிய விழிப்புணர்வு மிக மிக அவசியம். இவ்வாறு, கூறினார்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகி டாக்டர் வி.கே., சரவணன், நரம்பியல் மருத்துவ நிபுணர் சரவணன், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தமிழானந்த், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஐஸ்வர்யா, பேச்சு சிகிச்சையாளர் டாக்டர் சஜீ உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement