எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்காவின், அட்லாண்டாவில், ஜி 20 நாடுகளுக்கான வெளியுறவுத் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் நடந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு இடையே 'குவாட்' எனப்படும் இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடந்தது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த சந்திப்பின்போது 'குவாட்' நாடுகளுக்கு இடையே தங்கு தடையற்ற வினியோகம், கடல்சார் பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி, செங்கடல் போன்ற கடல் பகுதிகளில் சர்வதேச சட்டத்தின் கீழ் கப்பல் போக்குவரத்து உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது. ஐ.நா., கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு, கடல் வழியை பயன்படுத்த கட்டணங்கள் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ''எந்தவொரு நாட்டுக்கும் எதிராக 'குவாட்' கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால், சுற்றியிருக்கும் நாடுகளை வஞ்சிக்கும் வகையில், ஒரு நாடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது,'' என்றார்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில், முக்கிய கனிம வளங்கள் வினியோகத்திற்கு தடை, சந்தை விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்து வருவதையே, ரூபியோ மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

Advertisement