பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு: கரூர் கலெக்டரிடம் மனு

கரூர்:பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர் ஏமூர் கொங்குநகர் மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:

ஏமூர் கொங்குநகர் எம்.ஜி.ஆர்., காலனியில், 250 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சில இடங்களில் உள்ள நிலத்தை, ஊர் பொது பயன்பாட்டிற்காக ஏமூர் பஞ்., தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலர் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, கொட்டகை (செட்) அமைத்துள்ளனர். இதை ஏற்கனவே ஊர் மக்களின் புகார்படி, வி.ஏ.ஒ., ஆய்வு செய்து அகற்ற செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 27ல், மீண்டும் அதே நபர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அமைத்துள்ளனர். இதை ஆய்வு செய்த அதிகாரிகள், அகற்றும்படி கூறியபோது, மறுத்து வருகின்றனர். இதுகுறித்து வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement