இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்பேன்; சீமான்

ராமநாதபுரம்: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவித்தபிறகு முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக, பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அவர் பதிலளித்ததாவது; நான் மட்டுமல்ல, என் கட்சி பிள்ளைகள் கூட பொது வேட்பாளர் தான். அரசியலை அறப்போராக நினைக்கிறோம். அதை அந்த நேரத்தில் முடிவெடுக்கிறோம். சீமானின் குரல் சட்டசபையில் எதிரொலிக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் தான் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறேன்.

திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் அதை ஏற்காமல் இருப்பேனா? பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுப்பதை வேண்டாம் என்று சொல்ல, பைத்தியக்காரன் இல்லையே? ஸ்டாலின், இபிஎஸ், விஜயை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லையே, அரசியல், கொள்கை, நிலைப்பாடு வேறு. நான் ஒரு லட்சியவாதி. ஆதரவளிப்பதை கூட்டணியாக பார்க்கக் கூடாது.

விஜய்க்கு இருக்கும் பின்புலம் கூட எனக்கு இல்லை. நான் ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்து வந்து கட்சி துவங்கியவன். விஜய் திரையில் இருந்து வந்து கட்சி துவங்கினார். அரை சதவீதம், ஒரு சதவீதம் ஓட்டு இருப்பவர்களுடன் கூட்டணி குறித்து பேசியவர்கள், 8.5 சதவீதம் ஓட்டு வைத்துள்ள என்னிடம் கூட்டணி பற்றி பேசியிருப்பார்களா? மாட்டார்களா? எத்தனை கோடிகளும், சீட்டுகளும் பேசியிருப்பார்கள், நான் ஏன் சமரசம் செய்யவில்லை. எனக்கு என்று ஒரு நோக்கம், இலக்கு இருக்கிறது.

தீரன் சின்னமலை, மருது பாண்டியர்கள் சிலைக்கு பின்புறம், முதல்வரின் படம் எதற்கு? கோவிலை கோவிலாக வைக்க வேண்டும். என்னுடைய கனவை நிறைவேற்ற தனித்து நிற்க வேண்டியுள்ளது.

ஸ்டாலின் தேர்தல் வரும் போது பார்க்கலாம் என்று சொல்கிறார். சீமானுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்ததும் சொல்கிறோம் என்ற பெருந்தன்மையை நான் வரவேற்கிறேன். சட்டசபைக்குள் என்னை அனுப்பி தான் பாருங்களேன். அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை காட்டுவேன். 234 தொகுதிகளிலும் அம்பாசமுத்திரம் தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன். எப்படி வேலை செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.

ஈரோட்டில் இருந்ததைப் போல, இங்கும் போட்டி இருக்க வேண்டும். அதுபோன்ற முடிவை எடுத்தால் நான் மகிழ்ச்சியோடு ஏற்பேன், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement