தமிழகத்தில் லேசான மழை தொடரும்; நவம்பர் 2ல் நீலகிரிக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று (அக்டோபர் 29) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் (அக்டோபர் 30) அதே பகுதிகளில் நிலவுகிறது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (அக்டோபர் 31) வலுப்பெறக்கூடும். அடுத்த 2 நாட்களில் இது மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 30), நாளையும் (அக்டோபர் 31) லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 1ம் தேதி வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 2ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement