முன்னறிவிப்பின்றி நகை ஏலம் அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

விருத்தாசலம்: முன்னறிவிப்பின்றி நகையை ஏலம் விட்ட அடகு கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் மகன் மகேந்திரன்,24; இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது மனைவி கலைவாணியின் 3 சவரன் நகையை ரூ.85 ஆயிரத்திற்கு விருத்தாசலம் கடைவீதியில் உள்ள நகை அடகு கடையில் அடகு வைத்துள்ளார்.

அதன்பின், 18 கிராம் நகையை ரூ.72 ஆயிரத்திற்கு அடகு வைத்திருந்தார். இந்த நகைகளை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, அடகு கடை உரிமையாளர் சின்னதுரை ஏலம் விட்டுள்ளார்.

பணத்தையும் வட்டியையும் தான் கட்டி விடுவதாக பலமுறை சம்பந்தப்பட்ட அடகு கடையிடம் சென்று மகேந்திரன் கேட்டபோது, அடகு கடை உரிமையாளர் நகை ஏலம் விடப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், மகேந்திரனை அசிங்கமாக திட்டி மிரட்டியுள்ளார்.

இது குறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், சின்னதுரை மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement