நூற்றாண்டு பழமை வாய்ந்த உத்தமபாளையம் கிளைச் சிறை மூடல்: கைதிகள் பெரியகுளத்திற்கு மாற்றம்

உத்தமபாளையம்: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த உத்தமபாளையம் கிளைச் சிறை மூடப்பட்டு இங்குள்ள கைதிகள் பெரியகுளம் கிளை சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.

தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து அக்.,26 ல், 17 கைதிகள் தப்பி சென்றனர். இவர்களை 40 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு சங்கர் பொறுப்பேற்றுள்ளார்.

இந் நிலையில் பாதுகாப்பில்லாத உத்தமபாளையம் கிளை சிறையை மூட அரசு உத்தரவிட்டது. உத்தமபாளையத்தில் 20, பெரியகுளத்தில் 40 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. உத்தமபாளையம் கிளை சிறை நுாற்றாண்டை கடந்தது. கிளை சிறையில் ஒரு உதவி ஜெயிலர், ஏட்டு 2, போலீசார் 6 உளபட 11 பேர்கள் பணியில் உள்ளனர். இவர்களை தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் பணியில் சேரவும், கைதிகளை பெரியகுளம் கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியால் பாதுகாப்பிற்கு போலீசார் இல்லை என்பதால் கைதிகளை பெரியகுளம் கொண்டு செல்லும் பணி ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறை துறையினர் தெரிவித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் ஒரே வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், கிளை சிறை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தாலுகா அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது கிளை சிறையும் மூடப்படுகிறது.

Advertisement