உத்தரகோசமங்கையில் இரண்டு முறை வாரச்சந்தை நடந்ததால் மக்கள் குழப்பம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் ஒரே வாரத்தில் இரண்டு வாரச்சந்தை அறிவிக்கப்பட்டதால் மக்களும், வியாபாரிகளும் குழப்பமடைந்தனர்.
உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடம் 8 மாதங்களுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தோறும் இங்கு வாரச்சந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் அங்கு தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்தனர்.
இதனை நம்பி ஏராளமான சுற்றுவட்டார கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தையில் பொருள்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் உத்தரகோசமங்கை ஊராட்சி அலுவலகம் அருகே வராகி அம்மன் கோயில் செல்லும் பிரதான சாலையில் அக்., 29 முதல் புதியதாக வாரச்சந்தை வியாழக்கிழமை தோறும் நடத்துவதற்கு தன்னார்வலர் ஒருவர் அளித்த மனுவின் அடிப்படையில் திருப்புல்லாணி யூனியன் அலுவலர்கள் முன்வந்தனர்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வரும் நிலையில், தற்போது புதியதாக அக்., 29 முதல் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடத்துவதற்கு யூனியன் அதிகாரிகள் உத்தரவிட்டு பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் எந்த சந்தைக்கு, எந்த தேதியில் வந்து பொருள்கள் வாங்குவது என்ற குழப்பம் நிலவுகிறது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில் கூடுதலாக போக்குவரத்திற்கு செலவு செய்து கடை விரிப்பது வீண் அலைச்சலாக உள்ளது. எனவே இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முறையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.