கம்பம் அரசு மருத்துவமனை சீமாங் சென்டர் டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகம்: ஓய்வு, கவுன்சிலிங் வழங்க கோரிக்கை
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனை ‘சீமாங்’ சென்டரில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பால் மன அழுத்தம் ஏற்பட்டு பணியில் முழுமையான ஈடுபாடும், கவனமும் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
கம்பம் அரசு மருத்துவமனையில் செயல்படும் சீமாங் சென்டருக்கு கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருகின்றனர். உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளிலும் பிரசவங்கள் நடைபெறுவதில்லை. மேலும் இடுக்கி மாவட்டத்தில் இருந்தும் பிரசவத்திற்கென கம்பம் வருகின்றனர்.
இங்கு மாதம் குறைந்தது 200 பிரசவங்கள் நடக்கிறது. தேவையான டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளனர். ஆனாலும் சமீபத்தில் 20 வயது இளம் பெண் தனது முதல் திருமணத்திற்காக சேர்ந்து குழந்தை பிறந்தது. ஆனால் தாயை காப்பாற்ற முடியவில்லை. டாக்டர்கள் முடிந்த அளவு போராடியும் மதுரைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அதன்பின் சமீபத்தில் 40 வயது பெண்ணுக்கு கரு கலைப்பு செய்த பின் பாத்ரூமில் தவறி விழுந்துள்ளார். டாக்டர்கள் கரண்ட் ஷாக் கொடுத்து உயிரை மீட்டுள்ளனர். ஆனால் மூளைச்சாவு அடைந்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியாகினார்.
இச் சம்பவங்கள் நலப்பணிகள் இயக்குநரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவ்வளவு வசதிகள் இருந்தும் சீமாங் சென்டரில் தொடரும் மரணங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சீமாங் சென்டரில் பணியாற்றும் டாக்டர்கள் அனுபவம் பெற்றவர்கள், நன்றாக பணியாற்ற கூடியவர்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தடுமாற்றம் இருக்கலாம். எனவே அவர்களுக்கு ஓய்வு மற்றும் கவுன்சிலிங் வழங்குவது அவசியம் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்