நோயாளியுடன் பேசியபடி மூளை கட்டி அகற்றம்பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கோவை: பி.எஸ்.ஜி மருத்துவமனையில், நோயாளிகள் விழிப்புடன் இருக்கும் நிலையிலேயே மூளைக் கட்டிகளை அகற்றும் இரண்டு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

இரு பெண்களுக்கு மூளையின் இடது பகுதியில், பேச்சு மற்றும் மொழித்திறனை பாதிக்கக்கூடிய இடத்தில் கட்டிகள் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு பி.எஸ்.ஜி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிக்கலான ஆப்பரேஷன் மூலமாக கட்டிகளை அகற்ற முடிவு செய்தனர்.

ஆனால், நோயாளியை மயக்க நிலைக்கு கொண்டு செல்லாமல், விழிப்புடன் இருக்கும்போதே ஆப்பரேஷன் செய்ய தீர்மானித்தனர். அதன்படி அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது இரு நோயாளிகளும் விழிப்புடன் இருந்தனர். டாக்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதன் வாயிலாக பேச்சு மற்றும் உடல் இயக்கங்களைப் பாதிக்காத வகையில் கட்டிகளை டாக்டர்கள் முழுமையாக அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு இரு நோயாளிகளும் இயல்பாக பேசவும், நடக்கவும் முடிந்தது.

மூளையின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் உள்ள கட்டிகளை அகற்றும்போது, பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கங்களைப் பாதுகாக்க இந்த விழிப்புணர்வு நிலை அறுவை சிகிச்சை உதவுகிறது. இதன் வாயிலாக மேம்பட்ட மூளை அறுவை சிகிச்சையில் பி.எஸ்.ஜி மருத்துவமனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Advertisement