கல்லுாரி விற்பனை வதந்தி பரப்பிய இருவருக்கு 3 ஆண்டு சிறை உறுதி

கோவை: கரூரில் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விற்பனைக்கு வருவதாக சமூக வலைதளங்களில் பொய்யான விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கல்லுாரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கரூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் , 2013, ஏப்., 29 ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, வேலூரை சேர்ந்த நாகராஜன்,55, விருதாச்சலத்தை சேர்ந்த மருதை, நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரத்தை சேர்ந்த மணிகண்டன்,58, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது, கரூர் ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த கோர்ட், குற்றம் சாட்டப்பட்டவர்களில், நாகராஜன், மணிகண்டன் ஆகியோருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து 2023 ஆக. 3ல் தீர்ப்பளித்தது. விசாரணையின் போது மருதை இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

தண்டனையை எதிர்த்து நாகராஜன், மணிகண்டன் ஆகியோர் கரூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரித்த கோர்ட், இருவருக்கும் கீழ் கோர்ட்டில் அளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

Advertisement