சாமானியர்களை பாதிக்கும் மளிகை விலை உயர்வு மூன்று மாதங்களில் கட்டுக்குள் வருமென எதிர்பார்ப்பு
கோவை:அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துவருவது சாமானிய மக்களிடம் பொருளாதார சுமையை மேலும் கூட்டிவருகிறது.
தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கணிசமாக அதிகரித்துவருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எந்த பொருளை எடுத்தாலும் விலை பல மடங்கு கூடியுள்ளதால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இந்தாண்டு துவக்கத்தில், ரஷ்யா-உக்ரைன், ஈரான்-அமெரிக்கா நாடுகளிடையே கடுமையான போர் சூழலால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாடு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நம் நாட்டிலும் அத்தியாசிய பொருட்களின் விலை உயர்ந்தது.
பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.95லிருந்து 145 ஆகவும், சன் பிளவர் ஆயில் ரூ.130லிருந்து 190 ஆகவும் ஏப்., மாதத்தில் உயர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னை படிப்படியாக ஓய்ந்தாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக தமிழகத்தில் அதிகரித்துவருகிறது.
அதாவது, அரிசி விலையானது இதுவரை இல்லாத அளவுக்கு கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், பெரும்பான்மையான மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது மாத சம்பளம் வாங்கும் சாமானிய மக்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பருவ மழை பொய்த்து போனதை முக்கிய காரணமாக வியாபாரிகள் முன்வைக்கின்றனர்.
இவ்வளவு விலை உயராது!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் கூறிய தாவது:
மளிகை பொருட்கள் விலை உயர்வில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஏற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, சன் பிளவர் ஆயில் 90 சதவீதம் வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சில சமயங்களில் போர் சூழல் இதன் விலையை நிர்ணயிக்கிறது.
கடந்த மாதம் லிட்டர் ரூ.160க்கு விற்ற சன் பிளவர் ஆயில் தற்போது ரூ.165க்கு விற்கிறது. பாமாயில் ரூ.125 என விலையில் மாற்றமில்லை. தேங்காய் எண்ணெய் ரூ.280லிருந்து தற்போது ரூ.290 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.300லிருந்து ரூ.320 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.200லிருந்து ரூ.210 ஆகவும், நெய் ரூ.800லிருந்து ரூ.850 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல், மளிகை பொருட்களின் விலை ரூ.25-100 வரை கிலோவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.160 வரையும், பூண்டு ரூ.280 வரையும் விற்பனையாகிறது. வழக்கமாக டிச.,ஜன., மாதங்களில் பருப்பு உள்ளிட்ட புதிய மளிகை பொருட்களின் வருகை இருக்கும். வரத்தை பொறுத்து அதன் விலை இருக்கும்.
வரத்து குறைந்த பொருட்களின் விலை ரூ.5-10 வரை உயரும். ஆனால், இவ்வளவு விலை ஏற்றம் இதுவரை ஏற்பட்டதில்லை. மழை சீராக இல்லாததால் விளைச்சல் குறைந்துவிட்டது. சமீபத்தில் நல்ல மழை பெய்ததால் டிச., 15ம் தேதிக்கு மேல் மளிகை பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ரூ.10 அதிகரிப்பு
'கடந்த மாதம் ரூ.2,000க்கு விற்ற முதல் தரம் பொன்னி(26 கிலோ) தற்போதுரூ.2,250-2,300 வரையும், பி.பி.டி. பொன்னி ரூ.1650லிருந்து தற்போது ரூ.1,900-2,000 வரையும், இட்லி அரிசி ரூ.1,000லிருந்து தற்போது ரூ.1,150 ஆகவும், பச்சரிசி ரூ.900லிருந்து தற்போது ரூ.970 ஆகவும், சோனா மசூரி அரிசி ரூ.1,650லிருந்து தற்போது ரூ.1,900 ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து வரும் சீரக சம்பா விலையில்(கிலோ ரூ.130) எவ்வித மாற்றமும் இல்லை. சில்லரை விற்பனையில் கிலோவுக்கு ரூ.4 வரை அதிகரித்துள்ளது' என்கின்றனர் அரிசி வியாபாரிகள்.
இதுவரை இல்லாத விலையேற்றம்!
கோயம்புத்துார் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணகுமார்
கூறியதாவது:
ஆண்டுதோறும் அக்.,-டிச., வரை கிலோவுக்கு ரூ.4 வரை விலை வித்தியாசம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு ரூ.10 வரை விலை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதே இதற்கு முக்கிய காரணம்.
வடகிழக்கு பருவமழை நன்கு பெய்துள்ளதால் தமிழகம், கர்நாடகாவில் விளைச்சல் அதிகரித்து அரிசி விலை சிறிது குறையும் வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு ஜன., மாதம் அரிசி வரத்து இருக்கும் என்பதால் விலையேற்றம் சிறிது குறையும். அரிசி விலை கடந்த ஆக., முதலே உயர்ந்து வருகிறது; ஆனால், இப்போதுதான் தெரிகிறது. நாம் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான அரிசியை வாங்கி இருப்பு வைத்து விற்கிறோம்.
இருப்பு குறையும்போதுதான் பாதிப்பு வெளியே தெரிகிறது. முதல் தர அரிசிக்கு பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தையே நம்பி இருக்கிறோம். அங்கு மழை இல்லாத பட்சத்தில் இங்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, ஆந்திரா நெல் சென்னை மார்க்கெட்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு