விபத்தில் சிக்குவோருக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராதிகா தலைமை தாங்கிப் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பல்நோக்கு மருத்துவமனைகள் உட்பட 28 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வருவோரை உடனடியாக அனுமதித்து, முதல் 48 மணி நேரத்துக்கு கட்டணமின்றி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்பிறகே காப்பீடு உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சிகிச்சைக்கு வருவோரின் உறவினர்களை அலைக்கழிக்காமல், பாகுபாடின்றி மருத்துவச் சேவை வழங்குவது மருத்துவமனைகளின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் துணைத் தலைவர் தனசேகர், செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் ஆகியோர் பேசுகையில், ‘‘நோயாளிகளை அனுமதிக்கும்போதே அவர்களின் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும். மருத்துவமனைக் கழிப்பறைகளை கிருமிநாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

Advertisement