ஸ்டேஷனில் போதைப்பொருளை திருடிய போலீஸ் எஸ்.ஐ., கைது

நாகர்கோவில்:

கேரளாவில் போலீஸ் நிலைய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த எம்.டி.எம்.ஏ., போதைப்பொருளை திருடியதாக எஸ்.ஐ., அனஸ் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அழிக்க போலீஸ் நிலைய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் இளமக்கரா போலீசார் பறிமுதல் செய்த 87.37 கிராம் எம்.டி.எம்.ஏ., சீல் வைக்கப்பட்ட கவரில் வைக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் போதைப் பொருட்களை அழிக்க அதை ஆயுதப்படை முகாமுக்கு கொண்டு செல்ல எடுத்த போது 87 கிராம் எம்.டி.எம்.ஏ., கவர் மாயமாகியிருந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த அறைக்கு பொறுப்பு இல்லாத எஸ்.ஐ., அனஸ் அக்., 18- சென்றது தெரிந்தது. சிக்கிக் கொள்வோம் என்பதை தெரிந்து கொண்ட அவர் அக்., 26 -மீண்டும் அந்த போதைப் பொருள் கவரை திருப்பி வைத்ததாக தெரிகிறது. ஆனால் அக்கவரில் 202 கிராம் எம்.டி.எம்.ஏ., இருந்ததால் சந்தேகம் வலுத்தது.

இதைத் தொடர்ந்து அனசிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement