வடகிழக்கு பருவமழை ராணிப்பேட்டையில் கால்நடைகளை பாதுகாக்க 46 சிறப்பு குழுக்கள்

ராணிப்பேட்டை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வடகிழக்கு பருவழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட அளவில் 46 அவசர நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு குழுவிலும் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் இருப்பர். இதேபோல் தகவல்கள் பரிமாற்றம் மற்றும் கால்நடை சேவைகள் அளிக்க கட்டுப்பாட்டு அறை

அமைக்கப்பட்டுள்ளது.நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியினை அழைப்பு மையத்தின் இலவச எண் 1962 அழைப்பதன் மூலம், இருப்பிடத்திலேயே அவசரகால காயமடைந்த எல்லா விலங்குகளுக்கும் உடனடியாக கால்நடை மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அவசரகால தேவைகளையும் சமாளிக்கவும், கால்நடை நிலையங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கவும் போதுமான மருந்துகள் இருப்பில் உள்ளன.

வேலுார், கால்நடை நோய் புலனாய்வு பிரிவானது ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பருவமழைக்கு முன்னும், பின்னும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நிகழ்வு பற்றி கண்காணிப்பு செய்ய நோய் கண்காணிப்பு அணிகளாக செயல்படும்.

ஒட்டுண்ணி தாக்குதல் முதல் பல்வேறு நோய்களை கண்காணிக்க மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகளை கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவுகள் நடத்தி வருகின்றன. கால்நடைகளுக்கு இருப்பிடங்களிலேயே சிகிச்சை அளிக்க 4 நடமாடும் கால்நடை மருத்துவப்பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக மீட்பு முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். உடல்நலம் சரியில்லாத, கவனிக்கப்படாத மற்றும் வயதான கால்நடைகளுக்கு விலங்குகள் நல அமைப்புக்களின் உதவியுடன் பாதுகாப்பு வழங்கப்படும். புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கால்நடைகளை கம்பங்களில் கட்டி வைக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement