மண்சரிவை தடுக்க உதவும் குறுக்கு உழவு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் மழைப்பொழிவு நேரங்களில் மண்சரிவை தடுக்க குறுக்கு உழவு அல்லது படிமட்ட சாகுபடி முறைகளை பின்பற்றலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் சந்திரகவிதா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை, காற்று, ஈரப்பதம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

காய்கறி, கிழங்கு பயிர்களில் நீர் தேங்குவதை தவிர்த்தல், மண் அணைத்தல், பந்தல் காய்கறிகளுக்கு முட்டுக்கொடுத்தல், பூஞ்சாண நோய் மேலாண்மை செய்தல், பழப்பயிர்கள், மலைவாழை காற்றில் முறிந்து விடாமல் இருக்க முட்டுக்கொடுத்தல், மரத்தைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பாத்திகளை அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

மலைத்தோட்டப்பயிர்களான காபி, மிளகு, ஏலக்காயில் வேர் அழுகல் நோய் கட்டுப்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தெளித்தல் வேண்டும். குறிப்பாக மிளகு கொடிகளில் சரம் அழுகுதல், வாடல் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. இதற்கு நிழல் தவிர்த்து வெளிச்சம் ஏற்படுத்துதல் வேண்டும்.

ஏலக்காய் தோட்டங்களில் அழுகல் நோய் வராமல் தடுக்க துார் செடிகளை சுற்றிலும் காய்ந்த இலைகளை அகற்றி சுத்தம் செய்தல், வடிகால் வசதியை சீரமைத்து பூஞ்சாண பாதுகாப்பு ஏற்படுத்துதல் வேண்டும்.

மழைப்பொழிவின் போது மருந்து தெளிப்பு, உரமிடுதலை தற்காலிகமாக நிறுத்துதல், மண்சரிவை தடுக்க குறுக்கு உழவு அல்லது படிமட்ட சாகுபடி முறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

பயிர்களில் ஏதேனும் தீவிர நோய், பூச்சி தாக்குதல், இயற்கை இடர்பாடினால் சேதம் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர், கொடைக்கானல் அலுவலகத்தை அணுகி ஆலோசனை பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement