வடமாநில இளைஞர்களை கொத்தடிமைகளாக துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சி: திருச்சி அருகே, வடமாநில இளைஞர்கள் மூவரை, மாட்டுப்பண்ணையில் கொத்தடிமைகளாக வைத்திருந்தவருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ரவி, 55. இவர் தனது மாட்டுப்பண்ணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த மூவரை, கடந்த, 2016ம் ஆண்டு முதல் வேலைக்கு வைத்து, அவர்களுக்கு உணவு, சம்பளம், அடிப்படை வசதிகள் தராமல், கொத்தடிமைகளாக நடத்தியுள்ளார்.

இதுகுறித்த புகாரில், கடந்த, 2018ம் கொத்தடிமைகளாக இருந்த மூவரும், முசிறி ஆர்.டி.ஓ.,வால் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து, மாட்டுப்பண்ணை உரிமையாளர் ரவி, அவரது மனைவி சுந்தராம்பாள், மகன் ஜீவா, 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, ரவி இறந்து விட்டார். இந்நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து, நேற்று திருச்சி முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ஜீவாவுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சுந்தராம்பாள் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement