மன்றாடிய அரசு பஸ் டிரைவர் மனிதநேயம் மறந்த மேலாளர்
திருப்பத்துார்: 'முடக்கு வாதத்தால் பாதித்த மகனை கவனிக்க வேண்டும்' என, அரசு பஸ் டிரைவர் மன்றாடி கேட்டும், கொஞ்சம் கூட மனித நேயம் இன்றி, அவரை பணியிட மாறுதல் செய்த போக்குவரத்து கழக மேலாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்துார் மாவட்டம், சுந்தரம்பள்ளியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கண்ணன், 58, சேலம் கோட்டம், தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட, திருப்பத்துார் பணிமனையில், திருப்பத்துாரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்தார்.
இவரது மகன் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல, கண்ணன் 25 நாட்கள் விடுப்பு எடுத்தார். அவருக்கு மருத்துவ விடுப்பு இன்னும், 251 நாட்கள் கையிருப்பு உள்ளது.
இந்நிலையில், மகன் சிகிச்சை முடிந்து, கண்ணன் நேற்று பணிக்கு திரும்பினார். அப்போது, பணிமனை மேலாளர் செல்வகுமார், அவரை பெங்களூரு வழித்தட பஸ்சுக்கு பணியிட மாற்றம் செய்தார்.
அதிர்ச்சியடைந்த கண்ணன், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனை, வீல்சேரில் பணிமனைக்கு அழைத்து சென்று, மேலாளரிடம் முறையிட்டார்.
அப்போது, 'மகனை கவனிக்க ஆளில்லை. நான் தான் உணவு கொடுக்க வேண்டும். சிறுநீர், மலம் கழிக்க அழைத்து செல்ல வேண்டும். பழைய வழித்தட பணி இருந்தால் தான், காலையில் மகனுக்கு உதவி செய்து, மீண்டும் இரவு சென்று கவனிக்க முடியும். இன்னும் இரண்டு ஆண்டில் ஓய்வு பெற உள்ள நான் தொலை துாரம் பஸ் இயக்க உடல் ஒத்துழைக்காது' என, மன்றாடினார்.
ஆனால், மேலாளர் மனிதநேயம் மறந்து, பணியிட மாறுதலை திரும்ப பெற மறுத்ததால், கண்ணன் கண் கலங்கி நின்றார். மேலாளரின் இந்த கறார் நடவடிக்கை சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்
-
தீபாவளியை முன்னிட்டு மின் பராமரிப்புக்கு தடை
-
போக்குவரத்து போலீசாரை தாக்கிய மாங்காடு நபர் கைது
-
இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
-
அமெரிக்கா தாக்கினால் உடனடி பதிலடி ஈரான் ராணுவத்துக்கு உச்ச தலைவர் உத்தரவு
-
கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் சாலை மறியல்
-
‘இங்கு குடிக்க வேண்டாம்; ப்ளீஸ்!’ பஸ் பணிமனைகளில் விழிப்புணர்வு