அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி மாஜி அமைச்சரின் உதவியாளருக்கு சிறை

சென்னை: ‘அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, 13.10 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களிடம் உதவியாளராக இருந்தவருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், சுகாதாரத் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர்களிடம், அலுவலக உதவியாளராக பணியாற்றியவர் சந்திரசேகரன். இவர், சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி செந்தில்குமாரிடம், மின்துறை அமைச்சரின், அலுவலக உதவியாளர் வாயிலாக, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, 13.10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை.

இதையடுத்து செந்தில்குமார், தான் கொடுத்த, 13.10 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டபோது, 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதித் தொகைக்கு, இரண்டு காசோலைகளை வழங்கி உள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசில், செந்தில்குமார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Advertisement