அன்பில் மகேஷை ஐந்து நாள் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு கோர்ட்டில் மனு நவ. 2ல் உத்தரவு

(முகம் படம்)

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, வரும், 2ம் தேதிக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளி நிர்வாகிகளிடம், 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக, தனியார் பள்ளிகள் சங்கம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 26ம் தேதி, பள்ளிக்கல்வி துறை முன்னாள் அமைச்சர் மகேஷை கைது செய்தனர். அவரை நவம்பர், 6 வரை, சென்னை புழல் சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்கவும், உணவு, உடை மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்பாடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக, அன்பில் மகேஷை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த, 28ம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். ஐந்து நாள் போலீஸ் காவலில் செல்வது குறித்து, நீதிபதி கேட்க மகேஷ் மறுப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, போலீசிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். போலீஸ் தரப்பில் எஸ்.ஐ., செந்தில் ஆஜராகி கூறியதாவது:

இவ்வழக்கில் இரண்டாவதாக குற்றம்சாட்டப்பட்ட, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல், நேற்று முன்தினம் தான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் நடந்த விபரங்கள் குறித்து, மகேஷிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அதேபோல, இவ்வழக்கில் வசூலிக்கப்பட்ட பணம் இறுதியாக யாரிடம் சென்றது என்பது குறித்தும், மகேஷின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்கள், பினாமிகள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையின்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, இம்மனு மீதான உத்தரவை, நவ., 2ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி சத்தியமூர்த்தி, அதுவரை மகேஷுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்கவும், நவம்பர், 2ம் தேதி பகல் 12:00 மணியளவில் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

சிறை சப்பாத்தி வேண்டாம்

தி.மு.க., மகேஷ் புலம்பல்

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், ‘‘மற்ற சிறைவாசிகளுக்கு வழங்குவதை போல், சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதை சாப்பிட பிடிக்கவில்லை,’’ என்றும், நீதிபதியிடம் தெரிவித்தார்.

பின், அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் வாதாடியதாவது:

அன்பில் மகேஷுக்கு கணைய அழற்சி பிரச்னை இருப்பதால், எண்ணெய் மற்றும் புரதம் இல்லாத உணவு தான் வழங்க கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், சிறையில் சப்பாத்தி மட்டுமே வழங்கியுள்ளனர். இதனால், நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளார்.

இவ்வழக்கில், மகேஷுக்கு ஜாமின் வழங்குவதை தடுக்கும் வகையில், போலீசார் காவல் விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை; அவர் எங்கேயும் ஓடிவிட மாட்டார்.

மாநில நலனுக்காக மகேஷ் உழைத்துள்ளார். அவருக்கு வீட்டு உணவு மற்றும் மருந்துகள் வழங்க வேண்டும் என்பது அடிப்படை கோரிக்கை. போலீஸ் காவலில் அனுப்புவதாக இருந்தால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். நாங்கள் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சிறப்பு பிளீடர் உஷாராணி ஆஜராகி, ‘‘மகேஷுக்கு சிறையில் உரிய மருத்துவ வசதி செய்து தரப்படும். வீட்டு உணவு வழங்க ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியதால், பதிலளிக்க அவகாசம் வேண்டும்,’’ என்றார்.

வீட்டு உணவு வழங்க கோர்ட் அனுமதி

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷுக்கு, வீட்டில் தயார் செய்த உணவுகளை வழங்க அனுமதி அளித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, புழல் சிறை கண்காணிப்பாளருக்கு, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி பிறப்பித்த உத்தரவு:

முன்னாள் அமைச்சர் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களை காவல் துறை மறுக்கவில்லை. விசாரணை கைதி என்ற அடிப்படையில், அவரது உடல் நலனுக்கு ஏற்ற உணவு, மருத்துவ வசதிகளை பெற, அவருக்கு உரிமை உள்ளது.

அன்பில் மகேஷை சிறையில் வைக்க, கடந்த 26ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, காவல் துறை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சிறையில் வசதிகள் இருந்தால், அவருக்கென தனியாக உணவு சமைத்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் சமைத்த உணவை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் உணவுக்கு அவரே பொறுப்பு என, அவரிடம் உத்தரவாதம் பெற வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement