பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளம் அசாம், மேற்கு வங்கத்துக்கு எச்சரிக்கை
குவஹாத்தி: பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சங்கோஷ் ஆற்றில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. இதனால் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பூடானின் மலைப்பகுதிகளில் பனிப்பாறை ஏரிகள் உள்ளன. அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக 17 பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் உருகி உடைந்து நீர் வெளியேறும்போது, பள்ளத்தாக்குகள் வழியாக வெள்ளம் வேகமாக பாய்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பூடானில் இருந்து இந்தியாவுக்குள் பாயும் சங்கோஷ் ஆறும் இதனால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். இந்நிலையில், பூடானின் காசா மாவட்டத்தில், வகிலா மலையடிவாரத்தில் உள்ள ஆபத்தான ஷிந்தாபு பனிப்பாறை ஏரி, நேற்று முன்தினம் மாலை உடைந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
இந்த வெள்ள நீர் பூனகா மாவட்டத்தின் குமா கெவாக் பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் வேளாண் பாசனத்துக்கான சூரியசக்தி ஆலையை சேதப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் உள்ள சில கிராமங்களில் வெள்ளம் அடித்துவந்த மண், கற்கள் உள்ளிட்ட கழிவுகள் குவிந்தன.
பனிப்பாறை ஏரி உடைந்ததை தொடர்ந்து சங்கோஷ் ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டம், அசாமின் துப்ரி மாவட்டம், டார்ஜிலிங் மலைப்பகுதி, ஜல்பைகுரி, கூச் பெஹார் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் அப்பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சங்கோஷ் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அசாமின் துப்ரி மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதே போல் கடந்த ஆகஸ்ட் 26ல் நேபாள – திபெத் எல்லையில் பனிப்பாறை ஏரி ஒன்று உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000க்கும் மேற்பட்டோரின் நிலை இதுவரை தெரியவில்லை.