உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து பைலட் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்

சமோலி: உத்தரகண்டில் இன்று (அக்.,30) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பெங்களுரைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்டின் பத்ரிநாத்தில் இருந்து, ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஐந்து பயணியருடன் இன்று மதியம் 1:14 மணிக்கு புறப்பட்டது. டேராடூனில் உள்ள சகஸ்தாரா நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர், ஜோஸ்மத் பள்ளத்தாக்கு அருகே பறந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

அதன் இருப்பிடத்தை கண்காணிக்கும் கருவியும் செயல்படாமல் போனதால், ஹெலிகாப்டர் எங்கு உள்ளது என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பல கட்ட தேடலைத் தொடர்ந்து, சமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் உள்ள சாயி கிராமத்தில் ராணுவ முகாம் அருகே ஹெலிகாப்டர் கடைசியாக பறந்தது தெரியவந்தது. இதையடுத்து, மற்றொரு ஹெலிகாப்டர் வாயிலாக அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதன் முடிவில், ஆறு பேர் சென்ற ஹெலிகாப்டர் அங்குள்ள ஜே,பி., மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில், அதில் இருந்த பைலட் உட்பட ஆறு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தகவலை உத்தரகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் உறுதி செய்தது.

விபத்தை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் டில்லியை சேர்ந்த பைலட் ஹிமான்ஷு சபர்வால், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த மத்திய குற்றப்பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் சாலுன்கே, அவரது நண்பர்கள் நாகராஜா, பிரதாபா பச்சிஹள்ளி நிங்கராஜன், சுதீர் கே, சங்கர்கவுடா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முற்றிலும் கருகிய நிலையில் அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. அருண் சாலுன்கே, தன் நண்பர்களுடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு புனித பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஜோஷிமத் பகுதியில் பெய்த கனமழை, கடும் பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன்’ நிறுவனத்தின் அனைத்து ஹெலிகாப்டர் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement