3 ஆண்டுகளில் நாய் பிடிக்க ரூ.2.31 கோடி செலவு தினமும் கடியால் அவதிப்படும் ஓசூர் மக்கள்
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த, 3 ஆண்டுகளில் தெரு நாய்களை பிடிக்க, 2.31 கோடி ரூபாய் செலவு செய்துள்ள போதும், நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டுகளில் தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 18 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டது.
சாலைகள், சந்துகளில் சுற்றித்திரியும் நாய்கள் கூட்டம், அவ்வழியாக செல்லும் குழந்தைகள், மாணவ - மாணவியர், முதியோர் என அனைவரையும் கடித்து குதறி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், ஓசூர் அரசு மருத்துவமனையில், 300க்கும் மேற்பட்டோர் நாய்கடியால் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் மூலம், 2024ம் ஆண்டு முதல், தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்படுகிறது. இப்பணி, தனியார் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாயை பிடிக்க, 200 ரூபாய், அதை கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தி, 5 நாட்கள் பராமரிப்பிற்கு பின், பிடித்த இடத்திலேயே விடுவிக்க, 1,450 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
கடந்த, 3 ஆண்டுகளில், 14 ஆயிரத்து 381 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்காக மாநகராட்சிக்கு, 2.31 கோடி ரூபாய் வரை செலவாகியுள்ளது. மாநகராட்சியின் வருவாய், நாய் பிடிக்கவே செலவாகி வருகிறது.
கடந்தாண்டு ஜூன் மாதத்திற்கு முன் வரை, ஆண் நாய்களை மட்டுமே பிடித்து, மாநகராட்சி நிர்வாகம் கருத்தடை செய்தது. பெண் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய முயற்சிக்கும் போது, அவை கர்ப்பமாக இருந்ததால், கருத்தடை செய்ய முடியாத சூழல் உருவானது.
ஜூன் மாதத்திற்கு பின், பெண் நாய்களுக்கும் கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இருந்தாலும், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
ஓசூர் மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ''ஒரு பெண் தெருநாய் ஆண்டுக்கு, 2 அல்லது 3 முறை குட்டி போடுகிறது. ஒவ்வொரு முறையும், 4 முதல், 8 குட்டிகளை ஈன்று வருவதால், நாய்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து விடுகிறது.
கோவையில், 10 ஆண்டுகளாக தெருநாய்கள் பிடிக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த, 3 ஆண்டுகளாக தான், நாம் நாய்களை பிடித்து கருத்தடை செய்கிறோம். சில ஆண்டுகள் கருத்தடையை தொடர்ந்து செய்தால் தான், கட்டுக்குள் கொண்டு வர முடியும்,'' என்றார்.