ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்படும் முன் அரங்கேறிய சதித்திட்டம்; வெளியானது புதிய தகவல்

டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்படும் முன்பே அங்கே அரங்கேறிய சதித்திட்டங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மாணவர்களின் போராட்டம் காரணமாக, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வங்கதேசத்தில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகினார். பின்னர் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

வங்கதேசத்தின் முன்னாள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தேர்வு எப்படி இருந்தது, அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் என்ன என்பதை யூனுசின் பிரசாரத்தலைவர் ஷபிகுல் ஆலம் என்பவர் புதிய தகவல்களுடன் வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தமது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது;

வங்கதேசத்தின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவை கீழே இறக்கி, அந்த இடத்தில் அவருக்கு பதிலாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுசை அமர்த்த சதித்திட்டம் முழுமையாக தீட்டப்பட்டது. ஹசீனா அரசு கவிழ்க்கப்படும் 2 நாட்களுக்கு முன், முகமது யூனுஸ் தலைமை ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக பாரிசில் இருந்து அழைத்து வருவதற்கான ரகசிய திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஹசீனாவுக்கு பிறகு, முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக தலைமை ஏற்க வேண்டும் என்று மாணவர் தலைவர்கள் விரும்பினர். அவர்களுக்கு நம்பகமான ஒரு நபர் தேவைப்பட்டார். அப்போது முக்கிய பங்கை நிறைவேற்ற கதருதீன் ஷிஷிர் என்ற வங்கதேச புலனாய்வு பத்திரிகையாளர் முன் வந்தார். அவர் இந்த பெரிய விஷயத்தை ரகசியமாக கையாண்டார்.

மிகவும் நம்பகமான சிலருக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கிறது என்ற விவரங்கள் தெரிந்து இருந்தது. யூனுசை அணுகி முதல்கட்ட பேச்சு வார்த்தைக்கும் கதருதீன் ஷிஷிர் வழிவகுத்தார்.

மாணவர்கள் போராட்டத்தை நடத்துவோர் என்று கூறப்படுபவர்களால் ஹசீனா நாட்டை விட்டு விரட்டப்படுவதற்கு முன்பு 2 நாட்கள் முன்பு இது நடந்தது. ஹசீனாவின் பாதுகாப்பு படையினர் இந்த விவரங்களை அறிந்திருக்கவில்லை. அவர்கள் கண்டுபிடித்து இருந்தால் நாங்கள் அனைவரும் சிறைக்கு சென்றிருப்போம்.

சிக்கலான நேரத்தில் ஷிஷிர் மிகவும் நிதானத்துடன் செயல்பட்டார். ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய கொடூர கொலைகள் பற்றிய காணொளி ஆதாரங்களையும் சேகரித்தார்.

இவ்வாறு ஷபிகுல் ஆலம் கூறி இருக்கிறார்.

Advertisement