விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில், அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி மரியாதை செலுத்தினார்.

பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக வரலாற்றில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்தான், இந்தியாவில் பல்வேறு துறைகளில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், இன்று அத்தியாவசிய பொருட்களான அரிசி, வெங்காயம், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விலைவாசி உச்சத்தில் உள்ளது. இதுதான், த.வெ.க., அரசின் சாதனை. சட்டம், ஒழுங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் இதுவரை காங்., தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதித்ததில்லை. ஆனால், இன்று ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற விஜய், ஹிட்லரை போல செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவரது ஆட்சியில்தான் எதையுமே சொல்ல முடியாது. அதுபோல தமிழகத்தின் விலைவாசி நிலவரத்தை, ஒரு பேராசிரியர் கூறியதற்காக அவரை போலீசார் அழைத்து செல்கின்றனர்; கைது செய்கின்றனர்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, கைது நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். தி.மு.க., ஆட்சியிலும், அ.தி.மு.க.,வில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மெத்தபெட்டமைன் எனப்படும் கொடிய போதை பொருளை, 130 கிலோ அளவில் பதுக்கிய, த.வெ.க., நிர்வாகி மீது என்ன நடவடிக்கை என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement