மகேஷை ஐந்து நாள் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு கோர்ட்டில் மனு; நவம்பர் 2ல் உத்தரவு

5

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, வரும் 2ம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதி மன்றம் தள்ளிவைத்தது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளி நிர்வாகி களிடம் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக, தனியார் பள்ளிகள் சங்கம் புகார் அளித்தது.

மறுப்பு



அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 26ம் தேதி, பள்ளிக்கல்வி துறை முன்னாள் அமைச்சர் மகேஷை கைது செய்தனர். அவரை நவம்பர் 6 வரை, சென்னை புழல் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்கவும், உணவு, உடை மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்பாடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக, அன்பில் மகேஷை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 28ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். ஐந்து நாள் போலீஸ் காவலில் செல்வது குறித்து நீதிபதி கேட்க, மகேஷ் மறுப்பு தெரிவித்தார்.

சிகிச்சை



அதைத்தொடர்ந்து, போலீசிடம் நீதிபதி விளக்கம் கேட்டார். போலீஸ் தரப்பில் எஸ்.ஐ., செந்தில் ஆஜராகி கூறியதாவது: இவ்வழக்கில் இரண்டாவதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார் விசாரணைக்கு ஆஜராகாமல், நேற்று முன் தினம் தான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் தலைமறைவாக இருந்த காலத்தில் நடந்த விபரங்கள் குறித்து, மகேஷிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அதேபோல, இவ் வழக்கில் வசூலிக்கப்பட்ட பணம் இறுதியாக யாரிடம் சென்றது என்பது குறித்தும், மகேஷின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்கள், பினாமிகள் குறித்தும் விசாரிக்க வேண்டி உள்ளது. விசாரணையின்போது நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, இம்மனு மீதான உத்தரவை, நவ., 2ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி சத்தியமூர்த்தி, அதுவரை மகேஷுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை வசதிகளை வழங்கவும், நவம்பர் 2ம் தேதி பகல் 12:00 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

வீட்டு உணவு



இதற்கிடையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், ''மற்ற சிறைவாசிகளுக்கு வழங்குவதை போல், சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதை சாப்பிட பிடிக்கவில்லை,'' என்றும் கூறினார். இதையடுத்து, அவருக்கு வீட்டில் தயார் செய்த உணவுகளை வழங்க அனுமதி அளித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, புழல் சிறை கண்காணிப்பாளருக்கு, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி பிறப்பித்த உத்தரவு: முன்னாள் அமைச்சர் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களை காவல் துறை மறுக்கவில்லை. விசாரணை கைதி என்ற அடிப்படையில், அவரது உடல் நலனுக்கு ஏற்ற உணவு, மருத்துவ வசதிகளை பெற, அவருக்கு உரிமை உள்ளது.

உத்தரவாதம்



அன்பில் மகேஷை சிறையில் வைக்க, கடந்த 26ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, காவல் துறை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சிறையில் வசதிகள் இருந்தால், அவருக்கென தனியாக உணவு சமைத்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் சமைத்த உணவை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் உணவுக்கு அவரே பொறுப்பு என, அவரிடம் உத்தரவாதம் பெற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement