​தீபாவளி ஷாப்பிங் செய்யலாம்... விடிய விடிய! ​கோவை மக்கள் கோரிக்கை ஏற்பு

​கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்தாண்டு போலவே இந்தாண்டும் நள்ளிரவு தாண்டி 1 மணி வரை பொதுமக்கள் ஷாப்பிங் செய்யலாம்.

​மாநகர கடை வீதிகளில் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது. கூட்டத்தை கண்காணிக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒப்பணக்கார வீதி, உக்கடம், டவுன்ஹால், ராஜவீதி, பெரியகடை வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, சத்தி ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில், கூடுதலாக 'சிசிடிவி கேமரா' பொருத்தப்பட்டுள்ளது.

​கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு, மொபைல் போன் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மக்களோடு மக்களாக சாதாரண உடையில் கண்காணிக்கின்றனர். 7 இடங்களில் தற்காலிகமாக உயர்ந்த 'டவர்' அமைக்கப்பட்டு பைனாகுலர் வாயிலாகவும் கண்காணிக்கின்றனர்.

​''ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருட்டில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் 10 பேர் சிக்கியுள்ளனர்'' என தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

​தீபாவளியை முன்னிட்டு, பகல் நேர நெரிசலை தவிர்க்கவும், வேலைக்கு செல்வோர் வசதிக்காகவும் கடந்தாண்டு நள்ளிரவு 1 மணி வரை கடைகள் திறந்திருக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையில் உள்ள நியாயம் கருதி அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் நீட்டிப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் கேட்டிருந்தனர். அதோடு, பொதுமக்கள் தரப்பிலும் நிறைய கோரிக்கைகள் வந்ததால், கடந்த ஆண்டு போலவே இந்த தீபாவளிக்கும் 1 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிப்பது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினர்.

@block_P@

​'கையை பிடித்து இழுத்தால் கைது' ​

தீபாவளி ஷாப்பிங் செய்ய வருவோரை, கடை ஊழியர்கள் சிலர் சாலையிலேயே மறித்து கடைக்குள் அழைத்து செல்வதாக புகார் வருகிறதே என கேட்டபோது, ''பெண்களை கட்டாயப்படுத்தி கையை பிடித்து இழுக்கும் அநாகரிக செயலில் யாராவது ஈடுபட்டால் கைது நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இது போன்ற செயல்களை தடுக்க சிங்கப்பெண் போலீஸ் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்'' என்று துணை கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.block_P

Advertisement