போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா

புதுச்சேரி: கடந்த மாதம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 25,213 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சீனியர் போக்குவரத்து எஸ்.பி., திவ்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதுச்சேரி போக்குவரத்துக் காவல்துறை அக்டோபர் மாதத்தில் முக்கியமான போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ெஹல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது மொபைல்போன் பயன்படுத்துதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் வாகனம் ஓட்டுதல், சிறார்களை மோட்டார் வாகனங்களை ஓட்ட அனுமதித்தல் உள்ளிட்டவைகள் இம்முறையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி கடந்த மாதம் மொத்தம் 25,213 பேர் அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக, எதிர்திசையில் வாகனம் ஓட்டியதற்காக 7,133 பேரும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 5,081 பேரும், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தியதற்காக 3,225 பேரும், சிவப்பு விளக்கை மீறியதற்காக 1,476 பேரும் வழக்கில் சிக்கியுள்ளனர். மேலும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 744 பேரும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 317 பேரும், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காக 251 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் சிறார்கள் வாகனம் ஓட்டியதற்காக 203 வழக்குகளும், ஏர் ஹாரன் பயன்படுத்தியதற்காக 50 வழக்குகளும் மற்றும் பிற விதிமீறல்களுக்காக 6,733 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு எதிராக 11 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement