பிரத்யேக வசதிகளுடன் முதல் பயணத்தை தொடங்கிய வாரணாசி-டில்லி வந்தே பாரத் ரயில்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

1

- நமது சிறப்பு நிருபர் -

புதுடில்லி; வாரணாசியையும், புதுடில்லியையும் இணைக்கும் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.


மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வாரணாசி - புது டில்லி இடையிலான புதிய 'வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் சேவையை தொடங்கி வைத்தார். இந்த புதிய ரயிலில் ஏறி அதன் வசதிகளை அவர் ஆய்வு செய்தார்.


அப்போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது;


புதிய வந்தே பாரத் ரயில், இரவு நேரத்தில் பயணிக்க மிகவும் சிறந்தது. மிகுந்த கவனத்துடன் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு அம்சமும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. லோகோ பைலட்டுகளுக்கான கழிவறை வசதிகள் இருக்கின்றன.


நடு மற்றும் மேல் படுக்கைகளுக்கு ஏறிச் செல்ல வசதியாக கூடுதல் வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ரயிலின் உள்ளே சென்று பார்த்தோம் என்றால் பிரத்யேக உணவு தயாரிக்கும் பகுதி, தனித்தனியே பொருட்களை இருப்பு வைக்கும் வசதி இருப்பதை காணலாம்.


படுக்கைகளில் ஏறும் போது பயணிகளுக்கு சிரமம் இல்லாத படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேல் மற்றும் கீழ் படுக்கைகளில் உள்ளவர்கள் மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ள தனித்தனி சார்ஜிங் பாயிண்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


பயணிகளுக்கு என்ன தேவையோ, அதை முன் வைத்தே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. ரயில் பணியாளர்கள், லோகோ பைலட்டுக்களுக்காகவும் பிரத்யேக இருக்கைகள் இருக்கின்றன.


இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Advertisement