கந்தசஷ்டி விழாவில் 108 முறை வலம் வர தடை: கோவில் நிர்வாகம்

காஞ்சிபுரம்: ‘காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்று வருவதால், நவ., 10 – 15ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறும் ஆறு நாட்களிலும், பக்தர்கள் கோவில் பிரகாரத்தை 108 முறை வலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடைபெறும். இதில், காலை – மாலை முருகன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் உலா வருவார்.

கந்தசஷ்டி விழாவின் ஆறாவது நாளில் சூரசம்ஹாரமும், ஏழாவது நாள் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்திலும், வெளிபிரகாரத்திலும், 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

தற்போது கும்பாபிஷேகத்தை ஒட்டி, பல்வேறு திருப்பணி தொடங்குவதற்கான பாலாலயம், 2024ம் ஆண்டு பிப்., 26ம் தேதி நடந்தது. இதனால், 2024ம் ஆண்டு முதல் கந்தசஷ்டி விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், நவ., 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கந்தசஷ்டி விழா நவ., 10ம் தேதி தொடங்குகிறது. அன்று முதல், 15ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு பக்தர்கள் கோவில் பிரகாரத்தில், 108 முறை வலம் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement