டில்லி உஷ்
என்ன நடக்கிறது?
டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமீபத்தில் சந்தித்து, 30 நிமிடங்கள் பேசினார். கவர்னர்கள் மாற்றமா அல்லது மத்திய அமைச்சரவை விரிவாக்கமா... எது தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது என, சக அமைச்சர்களுக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி, யாருக்குமே தெரியவும் இல்லை; புரியவும் இல்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை, அது தொடர்பாக ஜனாதிபதி முர்முவை அமித் ஷா சந்தித்தாரா என, அதிகாரிகள் மத்தியில் பேச்சு. ஆனால், அதுவும் இல்லையாம். ஜனாதிபதி முர்முவும், அமித் ஷாவும் என்ன பேசினர், எதை பற்றி விவாதித்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் கூட இது சம்பந்தமாக எதுவுமே தெரியவில்லை.
ஜனாதிபதியை பிரதமர் அல்லது மற்ற அமைச்சர்கள் சந்தித்தால், அது குறித்து அரசு தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், அமித் ஷா சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லாததால், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடியும், ஜனாதிபதி முர்முவை சந்தித்து பேசினார். அது பற்றியும் எந்த தகவலும் இல்லை.
விஜய்க்கு ராகுல் வேண்டுகோள்?
டில்லி காங்., வட்டாரத்தில், தமிழகம் தொடர்பான ஒரு விஷயம் விவாதிக்கப்படுகிறது. ‘கூட்டணியில் உள்ள எங்களுக்கு நிதி அமைச்சகத்தை தர வேண்டும்’ என, த.வெ.க., தலைவரும், தமிழக முதல்வருமான விஜயிடம், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்ததாக சொல்லப்படுகிறது. ‘இது கட்சியை வளர்ப்பதற்கும், த.வெ.க.,வின் பொருளாதார கொள்கையை சீரான வழியில் எடுத்துச் செல்லவும் உதவும்’ என, ராகுல் விஜயிடம் சொன்னாராம். இதற்கு விஜய், ‘பார்க்கலாம்’ என, பதில் சொன்னதாக, ‘கிசுகிசு’க்கப்படுகிறது.
ஆனால், காங்., – எம்.பி., ஒருவர், ‘நான் தான், தமிழகத்தின் அடுத்த நிதி அமைச்சர்’ என, டில்லியில் சொல்லிக்கொண்டு திரிகிறாராம். தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழக அரசு ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளது. ‘தி.மு.க., ஒரு கடன்கார கட்சி’ என சொன்னவர், இந்த எம்.பி., அப்போது தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., – ம.தி.மு.க., இந்த எம்.பி.,யை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது. ஆனால் இப்போது, அந்த எம்.பி., ஒரு பொருளாதார நிபுணர் என, புகழ்கின்றனர். ராகுலின் வேண்டுகோளை முதல்வர் விஜய் ஏற்பாரா? அப்படியானால், நிதி அமைச்சர் மரிய வில்சனின் கதி என்னவாகும்?
தமிழருக்கு ஏன் கிடைக்கவில்லை?
தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதுடன், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியையும் துறந்தார். இதனால், ஒரு ராஜ்யசபா பதவி காலியானது. இந்த பதவிக்கு யார் வந்தாலும், 2030 ஏப்., வரை மூன்று ஆண்டுகள் எம்.பி.,யாக இருக்கலாம். பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்.முருகன்.
தமிழகத்திலிருந்து நிச்சயம் ஒருவரைத் தான், பிரதமர் மோடி எம்.பி.,யாக்குவார் என, பேசப்பட்டது. தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என, ஒருபுறமும், ஒரு நடிகருக்கும் வாய்ப்புள்ளது என, இன்னொரு பக்கமும் தகவல்கள் வெளியாகின. இப்படி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, எல்.முருகன் விட்டுச் சென்ற அமைச்சர் பதவியும் கிடைக்கும் எனவும், செய்திகள் உலா வந்தன.
ஆனால் கடைசியில், எல்.முருகனால் காலியான இடத்திற்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், எம்.பி., ஆவது உறுதி. தமிழகத்திலிருந்து யாரையும் பிரதமர் மோடி எம்.பி., பதவிக்கு ஏன் சிபாரிசு செய்யவில்லை?
ஹர்தீப் சிங் புரி, தற்போது பெட்ரோலியத் துறை அமைச்சராக உள்ளார். இவரது ராஜ்யசபா பதவிக்காலம், வரும் 25ல் முடிவடைகிறது. அதன்பின், இவர் ஆறு மாத காலம் வரை மட்டுமே அமைச்சராக பதவியில் தொடர முடியும்.
அமெரிக்கா – -ஈரான் போரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதில், நம் நாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை திறமையாக கையாண்டு வருகிறார் புரி. இவர், 1974 பேட்ச் ஐ.எப்.எஸ்., எனப்படும், வெளியுறவு சேவை அதிகாரி. 40 ஆண்டு காலம் வெளியுறவுத் துறையில் பணியாற்றி, பல நாடுகளில் துாதராக இருந்தவர்.
எனவே, ‘ஹர்தீப் சிங் புரி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றுவார் என்பதால், மீண்டும் அவருக்கு எம்.பி., சீட் கொடுக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர் பா.ஜ., மூத்த தலைவர்கள்.
சிலைகளை மீட்பதில்
பிரதமர் தீவிரம்!
சோழ பேரரசர் ராஜேந்திர சோழர் காலத்து ஆனைமங்கல செப்பேடுகள், ஐரோப்பிய நாடான நெதர்லாங்தில், லெய்டன் பல்கலையில் வைக்கப்பட்டிருந்தன. இரு நாடுகளின் தீவிர ஆலோசனைக்கு பின், இந்த அரிய செப்பேடுகள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் மே மாதம் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன் இந்த செப்பேடுகளை அளித்தார். இவை, தற்போது டில்லியில் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ளன. விரைவில், தமிழகத்திற்கு இந்த செப்பேடுகள் அனுப்பப்படும்.
இதையடுத்து, தென் மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறார் பிரதமர் மோடி. ஜூலையில் அவர் ஆஸ்திரேலியா சென்றபோது, ஆறு தலை சுப்ரமணிய சுவாமி, பத்ரகாளி திரிசூலம், ராஜேந்திர சோழன் காலத்து நந்தி சிலை ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து, 1,204 சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவை போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன.
இப்படி வெளிநாடுகளில் உள்ள நம் நாட்டின் சிலைகளை மீட்பதற்காக, மத்திய அரசின் பல்துறை கூட்டுக்குழு செயல்படுகிறது. உள்துறை, வெளியுறவு மற்றும் கலாசார அமைச்சக அதிகாரிகள் இக்குழுவில் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்குழுவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறாராம் பிரதமர் மோடி.
கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி