களாம்பாக்கத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாலங்காடு: களாம்பாக்கம் ஊராட்சியில், பஞ்சாயத்து அலுவலகம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாலங்காடு காவல் எல்லைக்குட்பட்டது களாம்பாக்கம் ஊராட்சி. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

களாம்பாக்கம் சாலை வழியாக மப்பேடு – ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொழிற்சாலை பணிக்காக திருவாலங்காடு, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும், 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில், அடிக்கடி விபத்து மற்றும் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் பொது இடங்களில், மது அருந்துவது உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இப்பகுதியில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில், திருவாலங்காடு போலீசார், 14 கி.மீ., உள்ளதால் சம்பவ இடத்திற்கு வர நீண்ட நேரமாகிறது. இதனால், குற்றவாளிகள் தப்பித்து செல்லவும் வழி வகுக்கிறது. எனவே, களாம்பாக்கம் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் நடக்கும் பிரச்னைகளுக்கு, தீர்வாக பஞ்சாயத்து அலுவலகம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க, திருவள்ளூர் எஸ். பி., சாய் ப்ரணீத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement