நகராட்சி கழிப்பறை பராமரிப்பு ஏலத்திற்கு இடைக்காலத் தடை

ராமநாதபுரம்:

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பதற்கு ஏல அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறை, தேவிப்பட்டினம் சாலையில் உள்ள கழிப்பறை மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பறைகள் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் பராமரிக்கப்படுகிறது. இதை குத்தகை விடுவதற்கான ஏலம் நவ.,5 ல் நடக்கவுள்ளதாக அக்.,16 ல் அறிவிக்கப்பட்டது. இந்த ஏல நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என சோசியோ எக்னாமிக் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தில் 100 சதவீதம் பொதுக்கழிப்பறை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சியில் 2022 முதல் செயல்படுத்துவதற்கான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை பின்பற்றாமல் நகராட்சி மின்னணு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி அக்.,16ல் அறிவித்த ஏல அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை நவ.,30 க்கு ஒத்தி வைக்கப்பட்டது. –––

Advertisement