84,707 வணிக வரி வழக்குகள் நிலுவை தீர்வு காண கூடுதலாக 11 மன்றங்கள்

சென்னை: தமிழக வணிக வரித்துறையில், 84,707 மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதை அடுத்து, விரைவாக தீர்வு காண, 11 மேல்முறையீட்டு மன்றங்களை உருவாக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றம் சேவை வரி சட்டத்தின் கீழ் வரி விதிப்பு, வரி மதிப்பீடு, அபராதம் உள்ளிட்டவை தொடர்பாக, வணிக வரித்துறை அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்கின்றனர். அவற்றில் ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி, முதல் மேல்முறையீட்டை விசாரிக்க, 15 அதிகார மன்றங்கள் உள்ளன.

கடந்த ஜூலை நிலவரப்படி, 84,707 மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்ட வரித்தொகை, 31,398 கோடி ரூபாய்.

கடந்த ஜன., முதல் ஜூன் வரை ஆறு மாதங்களில், 6,954 வழக்குகளுக்கு தீர்க்கப்பட்டு உள்ளன. மாதம் சராசரியாக, 1,159 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண ஏழு ஆண்டுகள் ஆகும். மேலும் ஆண்டுக்கு, 25,000 – 30,000 மனுக்கள் தாக்கல் செயல்படுகின்றன.

இதனால், வரி வசூல் பாதிக்கப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தற்போது சென்னை மத்தி, சென்னை தெற்கு, காஞ்சிபுரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, கடலுார், மதுரை, திருநெல்வேலியில் தலா ஒரு துணை ஆணையர் தலைமையில், 10 முதல் மேல்முறையீட்டு மன்றங்களும், மதுரையில், இணை ஆணையர் தலைமையில் ஒரு மன்றமும் அமைக்கப்பட உள்ளன.

இவை, மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மன்றங்களின் செயல்பாட்டிற்காக, 62 வணிக வரி அலுவலர்கள், 105 துணை வணிக வரி அலுவலர்கள் மறுபணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement