‘தாய்மாமன்’ திட்டம் பெயரில் பண மோசடி செய்யும் கும்பல்

சென்னை: ‘தாய்மாமன் சீர், வெற்றி பயணம்’ என்ற பெயர்களில், போலி இணையதள ‘லிங்’ எனப்படும், இணைப்பு அனுப்பி, பொது மக்களிடம் பண மோசடியில், கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, சமூக வலைதளங்கள் வாயிலாக போலி இணையதள இணைப்புகளை அனுப்பி, மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசின் திட்டங்களின் பெயரிலும், பண மோசடி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படங்களை, ‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக்’ தளங்களில் பயன்படுத்தி, கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதாகவும், முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனவும், போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், முதல்வர் விஜயின் புதிய அறிவிப்புகளை பயன்படுத்தி, மோசடி கும்பல் ஒன்று கைவரிசை காட்டி வருகிறது. குறிப்பாக, ‘தாய்மாமன் சீர், வெற்றி பயணம்’ என்ற திட்டங்களை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

‘தாய்மாமன் திட்டத்தின் கீழ், 5,000 ரூபாய் பெற, இந்த லிங்கை கிளிக் செய்யவும்; வெற்றி பயணம் திட்டத்தில் இணைய உடனடியாக பதிவு செய்யவும்’ என, சமூக வலைதளங்களில், ஒரு போலி இணையதள இணைப்பு பரப்பப்படுகிறது.

இதை நம்பி, ‘கிளிக்’ செய்பவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை, மோசடி கும்பல் வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளது. இது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement