‘108’ ஆம்புலன்ஸ் 3ம் தேதி முதல் வேலைநிறுத்தம்

சென்னை: ‘அரசின் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வரும், 3ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வோம்’ என, தி.மு.க.,வை சேர்ந்த தொ.மு.ச., யூனியன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலர் இருளாண்டி கூறியதாவது:

அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை, ஜி.வி.கே. – இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு பதிலாக, அரசே ஏற்று நடத்த வேண்டும். இந்நிறுவனத்தினர், தினசரி 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகின்றனர்.

எனவே, எட்டு மணி நேரம் பணி, நியாயமான ஊதியம், நிரந்தர பணி உள்ளிட்ட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். ஏற்கனவே, கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம், பட்டினி போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டோம்.

அதன்பின், அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்துடன் மூன்று முறை பேச்சு நடத்தி தீர்வு ஏற்படவில்லை. வரும், 3ம் தேதி மீண்டும் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதில், சுமுக தீர்வு ஏற்படாவிட்டால், திட்டமிட்டப்படி அன்று இரவு 8:00 மணி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement