ஊராட்சியில் கடன் வாங்கி ஒன்றியத்தில் சம்பள பட்டுவாடா: கள்ளிக்குடியில் அவலம்

திருமங்கலம்: ‘கள்ளிக்குடி ஒன்றியத்தில் போதிய நிதி இல்லாததால், ஊராட்சியில் கடன் பெற்று ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கிளர்க்குகள் என 63 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பலருக்கு 4 மாதங்களாக முழுமையாக சம்பளம் வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றியத்திற்கு போதிய வருவாய் இல்லாத நிலையில் அரசின் நிதி ஒதுக்கீடும் இல்லாததால் சம்பளம் வழங்க முடியாமல் தவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் வெள்ளாகுளம் ஊராட்சியில் இருந்து ரூ. 7 லட்சம் அளவுக்கு கடன் பெற்று ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளனர். இதுவரை ஒன்றியங்களில் இருந்துதான் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் நடந்துள்ளன. அந்தக் காலம் மாறி, ஒன்றியத்திற்கு பணம் இல்லாமல் ஊராட்சியில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து ஒன்றியத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement