நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்

44

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டில்லியில் ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி சார்பில் போராட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, கார்கே, ராகுல், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஓட்டுத் திருட்டு



இதில் ராகுல் பேசியதாவது: 2024 தேர்தலுக்கு பிறகு 15 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 2024 தேர்தல் சட்டவிரோதமான தேர்தல். திருடப்பட்ட தேர்தல். இதை நான் மட்டும் சொல்லவில்லை. தேர்தல் கமிஷனும் இதையே சொல்கிறது. பல ஆண்டுகளாக நாட்டில் ஓட்டுகள் திருடப்படுகின்றன. மபி, ஹரியானா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் 2024 லோக்சபா தேர்தலிலும் ஓட்டுகள் திருடப்பட்டன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் பட்டியலில் இருந்து பெயரை வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் ஆகியவை வாயிலாக ஓட்டுகள் திருடப்பட்டன.

@block_B@நான் சொல்வதை கேளுங்கள். நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது. ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவர் சிறை செல்வார் என அனைத்து குடிமகன்கள் மற்றும் இளைஞர்களிடம் சொல்கிறேன். ஞானேஷ்குமார் இல்லாமல் நரேந்திர மோடி பிரதமர் ஆகியிருக்க முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராக இருக்க முடியாது. block_B

எதிரி இல்லை



விவசாயிகளின் உரிமை கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலையில்லை. தொழிலாளர்களுக்கான உரிமை வழங்கப்படவில்லை. ஒட்டுமொத்த சுகாதார அமைப்பும் இரண்டு அல்லது மூன்று பேரிடம் உள்ளது. இத்தகைய இந்தியாவை நாம் விரும்பவில்லை. அத்தகைய இந்தியாவை நாம் ஏற்க மாட்டோம்.நாங்கள் நரேந்திர மோடி, அமித்ஷா, ஞானேஷ்குமாரை வெறுக்கவில்லை. நாங்கள் அன்பிற்கான கடையை திறந்தவர்கள். வெறுப்புக்கானவர்கள் அல்ல. வன்முறைக்கு எதிரானவர்கள். எனக்கு எதிரிகள் என யாரும் கிடையாது. பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ, ஞானேஷ்குமாரோ இல்லை. ஆனால், ஒவ்வொரு குடிமகனின் குரலும் எனக்கு முக்கியமானது. மதத்தை விட முக்கியமானது. அதுவே எனது மதம். நாங்கள் வன்முறையை பயன்படுத்த மாட்டோம். யாரையும் துன்புறுத்தவோ, வெறுப்பை பரப்பவோ மாட்டோம். நாங்கள் அன்புடன் பணியாற்றுவோம். அரசியலமைப்பை அழிக்க விட மாட்டோம்.

இந்தியாவுக்கான போராட்டம்



ஞானேஷ்குமாரை அடுத்து பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக போராடுவோம். யாரையும் தப்பிக்க விட மாட்டோம்.
எதிரிகள் யாரும் இல்லை என நமது மதம் சொல்கிறது. நாம் யாரையும் வெறுக்க மாட்டோம். அனைவரிடமும் இருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு தனி நபரின் குரலையும் பாதுகாப்போம். ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், ஆதிவாசி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என யாராக இருந்தாலும் அனைவரையும் பாதுகாப்போம். இந்த நாடு சரியான பாதையில் நடக்க உள்ளது. இன்று இரவு ஞானேஷ் குமாரால் தூங்க முடியாது. அவர் பயந்து காணப்படுகிறார். அவர் பெரிய குற்றத்தை செய்துள்ளார். நாட்டின் குரலையும், ஆன்மாவையும் அமைதியாக்க முயன்றார். இந்த போராட்டம் தனி நபரை எதிர்த்தோ அல்லது தனி கட்சியை எதிர்த்தோ நடக்கவில்லை. இது ஒன்று பட்ட போராட்டம். இந்தியாவின் போராட்டம். இந்தியாவின் குரல். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement